Sunday, July 10, 2011

பகல் கனவு!

சில்லென்ற மழைத்தூறல்
சிறகுகளடித்து சிலிர்த்து வர
தெரிந்து கொண்டேன்
இன்றைய தினம்
குடைகள் தூசு தட்டப்படுமென்று!

மரங்கள் மழையில் நனைந்து
தன் பூக்களோடு தூறல்களையும்
சேர்த்து தூவ
சோர்ந்து போன பார்க் பெஞ்சுகள்
எழுந்து அமர்ந்து குளித்தன...

ரோட்டோரக் கடையில் ஒதுங்கி
பால், டிகாஷன், சர்க்கரையோடு
டீயை உறிஞ்சுகையில்
தன்னையும் சேர்த்து
சுவையூட்டியது மழை நீர்.

இடையில் இருந்த இடைவெளியில்
எங்கிருந்தோ எங்கோ செல்லும்
கார் ஒன்று சாலை நீரை
என் மேல் இறைக்க
சட்டென்று கண் விழித்தேன்!

முகத்தில் நீரை தெளித்து
என் அம்மா என்னை எழுப்பிக் கொண்டு...
"டேய்! சோம்பேறி எவ்வளவு நேரம் தூங்குவ?
கத்திரி வெயிலில் எப்படி தூங்குகிறான் பார்
மணி ஒன்று ஆகிறது" என்றாள்...

வெளியில் வந்து முகம் கழுவக்
குழாயைத் திறந்தால்
சுட்டது தண்ணீ­ர்...
"சூப்பரப்பு" என்றேன் நான்!
கனவை நொந்து கொண்டு...

No comments:

Post a Comment