Wednesday, January 25, 2012

குடியரசு தின வாழ்த்துகள்


அடக்குமுறைசெய்த அன்னிய
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் வெற்றிவாகை
சூடிய தினம்
குடியரசு தின வாழ்த்துகள்
உப்புசத்தியாகிரகங்களால்
தன்
உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு
பெருமைத்தேடித்தந்த தினம்
தன் குருதிகளையும்
தன் தேகங்களையும்
தன் தாய்நாட்டிற்காக
அர்ப்பணம் செய்தவர்களை
நினைவுக்கூறும் தினம்
தன்
வம்சா வழியினர்கள்
வசந்தமாய் வாழ
தன்
வாழ்நாட்களை
வலியுடன் கழித்தவர்களை
வருத்தமுடன்
நினைக்கும் தினம்
சுதந்திரக்காற்றை
நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம்
தூக்கியெறிந்த
தியாகிகளின்
தியாக தினம்
நம் தாய்நாட்டினை
அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாடுபட்டவர்களை
இன்றுமட்டும்
நினைப்பதில்
நியாயமில்லை
எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தார்களோ
அதைகண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது
நம்கடமை
சுதந்திரக்காற்றை சுகமாய்
அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி
வாழ்வோமாக
நாட்டை நினைக்கும்போது
நாட்டுக்காக
போராடியவர்களையும்
நினைவுகூறுவோமாக.
அத்தனைபேரையும்
புகழ்ந்து போற்றுவோம்
எந்தாய்திருநாட்டில்
வாழும் கோடானகோடி
மக்களுக்கும்
உலகம்முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும்
என்அன்பான
குடியரசு தின வாழ்த்துகள்.

Thursday, January 12, 2012

பொங்கல் வாழ்த்து !

பொங்கல் வாழ்த்து


பொங்கல் திருநாளாம் இந்நாளில்
பொய்ம்மை மறையும் நன்நாளில்
பொங்கல் வாழ்த்துதனை நானும்
பொறாமையின்றி கூறிட விழைகிறேன் !
நாட்டில் உள்ளோர் அனைவரும்
நாணயமான வாழ்வுதனை நடத்தட்டும்
நல்லோரும் வல்லோரும் இணைந்து
நானில புத்துலகை அமைக்கட்டும் !
உலகில் வாழும் தமிழரெல்லாம்
உயர்ந்த வாழ்வு நடத்தட்டும்
உரிமைக்குரலை நாளும் ஒலித்திடவே
உண்மையாக யாவரும் உழைக்கட்டும் !
தைமகள் வருகையை எல்லோரும்
தவறாமல் எதிர்க்கொண்டு நோக்கட்டும்
தமிழரின் தன்மானம் உலகில்
தனித்தன்மை யோடு திகழட்டும் !
தைத்திங்கள் முதல்நாள் பிறக்கட்டும்
தரணிவாழ் தமிழர்கள் சிறக்கட்டும்
பொங்கல் விழாவதுவும் மலரட்டும்
பொதுமைக் கருத்துக்கள் உலாவரட்டும் !
எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கட்டும்
என்றென்றும் உலகமக்கள் யாவரும்
எல்லா வளமும் பெற்றிட்டே
ஏற்புடனே திகழ்ந்து மகிழட்டும் !

Wednesday, January 11, 2012

மாலை - தணிவு

காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து
இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள், முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்துகொண்டன
விவாதங்கள்
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன
வழிகளில்
அறைபட்டுத் திரும்பின
முடிவுகள்
அரைகுறைப் படிமங்களாக வந்து
உளறி மறைந்தன
பசியும் நிறைவும்
இரண்டும் ஒன்றாகி
என் தணிவு
வேறொரு விளிம்பைச்
சுட்டிக் காட்டாத
விளிம்பில்
தத்தளிப்பு மறைந்த
என் தணிவு
நிகழும் போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு

மாலை - காத்திருத்தல்

விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது
அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடித்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது
அடர்வனங்களின்
குறுக்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டாறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்
உண்டு-இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
O
காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக
என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைப்பொழுதை விடுவித்து-
காத்திருக்கிறேன்
மறுபுறங்களிலிருந்து
வெற்றி தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை எதிர்நோக்கி

விடைகள்

விடைகள்
மிகவும் மெலிந்தவை
ஏதோ சுமந்து வருவன போல
முக்கி முனகி வியர்வை துளித்து
நம் முகத்தில்
திருப்தி தேடுபவை
தரையில் கால்பாவாது
நடக்கவும்
நீரில் நனையாமல்
நீந்தவும்
அறிந்தவை
முந்தாநாள்
ஒரு விடையை
எதிர்ப்பட்டேன்
என்னைப் பார்த்தவுடன்
அது
உடையணிந்து
உருவுகொண்டது
தன்னை ஒருமுறை
சரிபார்த்துக் கொண்டதும்
எங்களைச் சுற்றி
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு
என்னை நேர்கொண்டது
நான்
ஒன்றும் சொல்லவில்லை
நெளிந்தது
கலைந்து மங்கும்தன்
உருவை
ஒருமித்துக் கொள்ளக்
கவலையோடு முயன்றது
சுற்றிலும் பார்த்துவிட்டு
ஒருமுறை
என்னைத் தொடமுயன்றது
நான்
எதுவுமறியாத
பாவனை காட்டியதில்
ஆறுதலுற்றுக்
கொஞ்சம் நிமிர்ந்தது
எதிர்பாராது வீசிய காற்றில்
இருவரும்
வேறுவேறு திசைகளில்
வீசப்பட்டோம்
திரும்பப்போய்த்
தேடிப்பார்த்த போது
சாமந்திப்பூ இதழ்கள் போல்
பிய்ந்து கிடந்தன
சில
சாகசங்கள் மட்டும்

காலம் - புழுதி

எங்கிலும் புழுதி
வாழ்க்கையின் தடங்களை
வாங்கியும் அழித்தும்
வடிவு மாற்றியும்
நேற்று நேற்றென நெரியும் புழுதி
தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி
புழுதி அள்ளித்
தூற்றினேன்
கண்ணில் விழுந்து
உறுத்தின
நிமிஷம் நாறும் நாள்கள்

காலம் - சுள்ளி

காடு முழுதும்
சுற்றினேன்
பழைய
சுள்ளிகள் கிடைத்தன
நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின
குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது
அணைத்து,கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்துக்
கூசின இலைகள்
தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது

பறவைகளுடன் பேசுதல்

விக்கிரமாதித்தனுக்கு பறவைகளின் மொழி தெரியும்
என பாட்டி சொல்லிக்கொண்டிருந்த ராத்திரி
விக்கிரமாதித்தனானேன்
காலையில் முருங்கை மரத்திலமர்ந்த
தேன்சிட்டை அழைத்தேன்
அது பேச்சை அடித்துப் பறந்தது
எனக்கின்னும்
பறவைகளின் மொழி வசமாகவில்லை
கூட்டமாகவோ தனித்தோ பார்க்கும்போதெல்லாம்
அழைத்துப்பேச ஆசை
அழைப்பின் ஒவ்வோர்விசையும்
பறவை முகம் திருப்பிக் கொள்கிறது
சுவரில் தொங்கும் கொக்குகளின் ஓவியம்
பறவைகள் குறித்த ஒரு வெளிநாட்டுப் புத்தகம்
திருமண நினைவுப் பரிசாய் கிடைத்த
சிறகுகள் கொன்று சட்டமிடப்பட்ட
இறகுகளால் ஆன பறவைகள்
ஆற்றங்கரையில் கண்டெடுத்து வந்து
எறியாமல் வைத்திருக்கும் பலவண்ண இறகு
(
அவள் முகம் வருடி சிலிர்ப்பூட்ட உதவும்)புசிக்கக் கிடைக்கும் மாமிசம் என
பறவைகளின் குறுக்கீடுகள்
உள்ள வாழ்க்கையில்
எந்தப் பறவையையும் அருகில் பார்க்க
முடிந்ததில்லை
பார்க்க நினைப்பும் வருவதில்லை
ஆயிரம் மொழிச் சப்தங்கள் புதையுண்டிருக்கும்
காற்றை அகழ்ந்தால் எனக்கு
பறவையின் மொழி கிடைக்கலாம்
காற்றை அகழ்ந்திட
சிறகுகள் வேண்டும்
அதற்கும் மீண்டும் நான்
பறவைகளிடம்தான் போகவேண்டும்.

கனவு


கண்மூடி விழிக்கும்  முன் 
வந்து  செல்லும்  கனவில் 
எதிர்காலத்தை  காணுங்கள்  என்று 
அறிவுரை  சொல்லும்  பெரியோரே !

தயவு  செய்து  நாங்கள்
கனவு  காண  செல்லும்முன் 
அந்த  கனவை  நனவாக்க 
எவ்வளவு  லஞ்சம்  தேவை 
படும் என்று முடிந்தால் 
முன்கூட்டியே  கணித்து சொல்லுங்கள் ....

இப்பொழுதே தொடங்கி விடுகிறோம் 
கனவு காண அல்ல 
இன்றிலிருந்தே  எங்கள் பெற்றோரின் 
உழைப்பை சுரண்ட..