Sunday, July 10, 2011

நாங்களும் மனிதர்கள்

வாழ்ந்ததற்கான
அடையாளமின்றி அழிந்துபோனது
இலங்கை தமிழனின் இருப்பிடம்,
முள்வேலி கம்பிகளுக்குள்ளே
முடவர்களாய்,
குருதியின் நாற்றத்தோடு
கழிவுகளின் நாற்றம்
இரண்டுக்கும் இடையில் நாங்கள்.

எந்த கவிஞனாலும்
எழுதமுடியாத 'துயரம்'
எந்த ஆண்டவனாலும்
தீர்க்கமுடியாத 'பிரச்சினை'
இலங்கை தமிழனுக்கு நேர்ந்தது.

இறந்த உறவுகளுக்காகவும்
நட்புகளுக்காகவும் அழுவதா?
இல்லை
ஏன் நாம் மட்டும் தப்பினோம் என்றழுவதா.
தெரியவில்லை.

மனிதர்களோடு சேர்ந்து
இயற்கையும் அழிந்தது
போராட முடியாமல்.

எல்லா மதங்களாலும்
எல்லா மனிதர்களாலும்
கைவிடப்பட்டோம்.
மனிதனின் மாமிசத்தை
மனிதனே கண்டுகழித்த காட்சி,
நானும் சிதைந்திருந்தால்
இப்படித்தான் சிதைந்திருப்பேனோ
என தன்னைத் தானே
பிணமாக நினைத்துப்பார்த்த காட்சி.

மிருகமாய் பிறந்திருந்தால்
கழுத்தறுப்பட்டு கணநேரத்தில் இறந்திருப்போம்
ஏன் மனிதராய் பிறந்தோம்.
துண்டிக்கப்பட்ட உறுப்பு
துடிப்பதை பார்க்கும் நிலை,
தூளிகட்டி தாலாட்டிய
தாய் இறப்பதை பார்க்கும் நிலை,
தன் கண்முன்னே
தான் ஈன்றெடுத்த பிள்ளையின் சவம்
காண்பதற்கு
எந்த கொடுமை மிச்சமிருந்தது.

எங்களின்
மரணத்தை கண்டு
மரணமே பயந்த நேரத்திலும்
கொல்ல வந்த
மனித இனம் பயப்படவில்லை.

சாத்தானும்
இந்த கொடுமையை செய்திருக்காது.

நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது.

No comments:

Post a Comment