Friday, July 15, 2011

மாலை - எது

தூசி படிந்த புளியமர வரிசையை
வைதுகொண்டே
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்
தோப்புகளுக்குள்
இரைச்சலைக் கிளறி
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
ததும்புகிறது
என் வலி
 
பொழுது நிரம்புகிறது
ஒரு இடுக்கு விடாமல்
 


தூசி படிந்த இரைச்சலுக்கடியில்
சாத்வீக கனத்துடன்
இது எது?

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்
இடறாத என் பாதங்களினடியில்
இது எது
என் சாரங்களின் திரட்சியுடன்
வலியுடன்
அலங்கரித்த விநோதங்களை
அகற்றிவிட்டு
எளிய பிரமைகளின் வழியே
என்னைச் செலுத்தும்
இது எது?

கனவு-அன்று-கனவு

எல்லாம் முடிந்துவிட்டது எனக்
கடைசியாக வெளியேறிய போது
கவனித்தான்
பின்புலமற்ற
தூய நிலவிரிவு ஒன்று
அவனுக்காகக் காத்திருப்பதை

கனவுபோன்று இருந்தாலும்
கனவு அன்று அது

ஒளியிலிருந்து
இருளை நோக்கிப்
பாதிவழி வந்திருந்தது
அந்த இடம்

கிழக்கும் மேற்கும்
ஒன்றாகவே இருந்தன
தூரமும் கூடத்
தணிந்தே தெரிந்தது

தெரிந்ததில்
எப்போதாவது ஒரு மனிதமுகம்
தெரிந்து மறைந்தது
ஒரு பறவையும் கூடத்
தொலைவிலிருந்து தொலைவுக்குப்
பறந்துகொண்டிருந்தது

சஞ்சரிக்கலாம்
மறந்து மறந்து மறந்து
மடிவுற்றிருக்கலாம் அதில்
நடக்க நடக்க
நடையற்றிருக்கலாம்

ஆயினும்
உறக்கமும் விழிப்பும்
துரத்திப் பிடிப்பதை
அவற்றின் மடிநிறைய
தலைகளும் கைகால்களும்
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்
பார்க்கும் நிமிஷம்
ஒருவேளை வரலாம்

கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்

Wednesday, July 13, 2011

நீ எனக்கு யாராம்?

கிழக்கும் மேற்கும் திசைகளென்றேன்
நீ திசைகளென்ற ஒன்றே இல்லையென்றாய்,
வானம் முழுதும் நட்சத்திரம் என்றேன்..
வானம் என்பதே பொய் என்றாய்....

பூமியின் சுழற்சி இடமிலிருந்து வலமென்றேன்
அதுவும் ஒரு நாள் மாறுமென்றாய்,
பகலில் அத்தனையும் அழகு என்றேன்
பகலென்பதும் மட்டுமன்றி பகலவனே பொய்யென்றாய்!

நான், நேரென்பேன், நீ கோணலென்பாய்
நான் சந்தோசமென்பேன் நீ துக்கமென்பாய்
நான் காதல் என்பேன் அது மாயை என்பாய்
நான் வாழ்க்கை என்பேன் நீ மரணமென்பாய்
எல்லாம் முரண்களாக கொண்டு
எப்படி இயங்குகிறோம் ஒன்றாய் என்பேன்?

இயக்கம் என்பதில் முரணில்லை என்பாய்
நான் உன்னிடம் நெருங்கி வருவேன்
என் நெஞ்சினில் கூராய் கத்தியைச் சொருகுவாய்
உன்னை விட்டு தூரப் போவேன்...
தாயாய் என்னைக் கட்டியணைப்பாய்..!

நட்புமில்லை என்றாய், காதலுமில்லையென்றாய்
உறவுகளற்ற உணர்வென்றாய்
தளிர்களற்ற செடி என்றாய்
கனவுகளற்ற உறக்கமென்றாய்
கவிதைகள் இல்லா காதல் என்றாய்
சொல்லும் போதே செத்து விடும்
வார்த்தைகளை நீ மதியேனென்றாய்;

நான் இருக்கிறேன் என்றாய்
உடனேயே நான் இல்லை என்றாய்;
சோகம் என்றாய் ஆனால்...
அதில் சந்தோசம் என்றாய்!
எப்படி உன்னை கணிப்பதென்றேன்?
என்னை ஏன் கணிக்கிறாய் என்றாய்..?

நீ எனக்கு யாரென்றேன்?
காற்று உனக்கு யாரென்றாய்?
நான் திகைக்கிறேன் என்றேன்..
நீ நகைக்கிறேன் என்றாய்!
கடைசியில்...

எனக்கான காத்திருப்புகளில்
வராத என்னைத் தேடி தேடி
அழுதேன் என்றாய்...?
இப்போதாவது சொல்...

நீ எனக்கு யாராம்?

Tuesday, July 12, 2011

காத்துக்கிடக்கும் நான்......

கசிந்து வரும் கண்ணீர்த்துளி
பசிந்துகிடக்கும் உயிர்த்துளி  
காத்துக்கிடக்கும் நான்......

உன்னைத்தவிர........

தேவதை தேவையில்லை, 
தேன்நிலவு தேவையில்லை, 
தேவை ஏதுமில்லை , 
உன்னைத்தவிர........

காதல் மட்டும் வந்ததே... !

கதைகள் சொல்லவில்லை  
கவிதைகள் எழுதவில்லை  
காதல் மட்டும் வந்ததே... !

Monday, July 11, 2011

இலட்சியம்

எனக்குள்ளும் இலட்சியம் இருந்தது
இன்டெர்வியுவிற்குச் செல்லும் வரை
இலட்சியத்தை நான் சொன்னேன்
லட்சம் ரூபாய் அதிகாரி கேட்டார்
நானும் கொடுத்து விட்டேன்
.
.
லட்சத்தை அல்ல
என்னுடைய இலட்சியத்தை!!!!!!!!

விந்தை

ஐந்தறிவுள்ள
மாடு கன்று போட்டால்
பெண் கன்று வேண்டும்
கோழி குஞ்சு பொறித்தால்
பெட்டைக் கோழி வேண்டும்
ஆனால்
ஆறரிவுள்ள
பெண் குழந்தை பிறந்தால்
மனிதா! நீ ஏன் ?
ஐந்தறிவுள்ள மிருகமாகிறாய்!!

கிராமத்து டவுன் பஸ்

பஸ் என்னும்
சல்லடையில்
சலித்து எடுத்தது
போகச் சக்கைகளாக
மனிதன் !!!

பலூன் வியாபாரி

மூச்சுக் காற்றை
விற்றுப் பிழைக்கும்
பலூன் வியாபாரி !!!

அன்றும் இன்றும்

அன்று
பிள்ளை வரம் வேண்டி
அரச மரத்தைச் சுற்றினார்கள்
பெண்கள்!!!இன்று
பெண் பிள்ளைகளைப் போட
அரசுத் தொட்டில்களைச் சுற்றுகிறார்கள்
பெண்கள்!!!

உலை

வரதட்சணைக் கொடுமை,
பெண் கொதித்தாள்!

வறுமைக் கொடுமை,
ஏழை கொதித்தான்!

உலையே,
உனக்கு என்ன கொடுமை?
நீ இவ்வாறு கொதிக்கிறாய்?

வானவில்

ஒரு புடவைக்கு
மறு புடவை இல்லை
இந்தியப் பெண்களுக்கு
ஆனால்
ஒரே நேரத்தில் ஏழு
புடவைகள் அணிந்திருக்கும் நீ
குபேரன் குமாரத்தியோ ??

திருமணம்

காதல் என்னும்
திருட்டுக்குக் கிடைக்கும்
தண்டனை திருமணம் !!!

வாழ்க்கை

வாழ்க்கை என்னும்
கால்ப்பந்தாட்டத்தில்
பிரச்சினை என்னும்
பந்தை விரட்டிச் செல்லும்
விளையாட்டு வீரன் மனிதன்!!!

பிச்சைக்காரன்

ஞாயிறு மாதா கோயில்
செவ்வாய்,சனி அம்மன் கோயில்
வெள்ளி பள்ளிவாசல்
எம்மதமும் எனக்குச் சம்மதம் !!!

விவசாயி

ஒரு துளி மழை மண்ணில்
ஓராயிரம் கனவுகளுடன்
விவசாயி !!!!

முரண்பாடு

அழகான பெட்டி
அனாதையாய் கிடந்தது
சுற்றிலும் பார்த்தேன்
யாரையும் காணோம்
சும்மா இருப்பேனா?உடனே எடுத்தேன்
பெட்டியை அல்ல
உயிருக்கான ஓட்டம்...

அரசாங்க சாலை

மேடு பள்ளம் வாழ்க்கையில் மட்டுமா?அரசாங்க சாலையிலும்!!!

அவளுக்கு தேவதை என்று பெயர்...



1.
உணவருந்தும் முன்
ஒரு நிமிடம் கண்மூடி இறைவனுக்கு
நன்றி சொல்கிறாய்
நீ.ஒரு மிகச்சிறந்த
ஓவியத்தின்
இறைவழிபாடு கண்டு
என்னை மறந்துபோகிறேன்
நான்.

2.
ஆற்றில் குளித்துவிட்டு
கரையேறுகிறாய்
நீ.ஆற்றுமீன்கள் எல்லாம் துள்ளிவிழுந்து மரிக்கின்றன..பிறவி பயன் அடைந்துவிட்டோம்
என்று முணுமுணுத்தபடி..

3.
உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..எங்களுக்கு விரல்கள்,உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!

4.
படபடவென்று பேசிக்கொண்டிருக்கும்
உன் இதழ்களை மூடிவிடுகிறேன்.படபடக்கும் உன் விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய்
நீ.பட்டாம்பூச்சி பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன்
நான்.

5.
தெருவெல்லாம் வீழ்ந்துகிடக்கின்றன
பன்னீர் பூக்கள்..பன்னீர்பூ மரத்திற்கு

யார் சொன்னது உன் வருகையை?