Monday, July 4, 2011

குருவிக் கதை !

குருத்து மண் கும்பலிலே
குலையடிக்கும் அம்பலமே
குருதிவிலை சொல்வாயோ
குருவிக் கதை அறிவாயோ

சிறு மரத்தின் கிளையினிலே
சில கலப்பின் உதவியிலே
சிறு கூட்டில் வாழ்ந்ததுவாம்
சிங்காரச் சிறுங் குருவி

மழை வருமாம் மதி வருமாம்
மணல் காற்றில் சுழி வருமாம்
மறு காலம் வந்திடுனும்
மலர்க்கோலம் தந்திடுமாம்

ஒரு காலம் ஒரு கூட்டில்
ஒன்றாகத் தன் வீட்டில்
ஒன்பது நாள் ஒன்றிணைந்து
ஒன்றாகச் சேர்ந்த வினை

கண்ணாகக் கணக்கெடுத்து
கடுங்குளிரில் கைபிடித்து
கலர் கலராய்த் தெரிந்த கனா
கரை சேர்க்கப் புறப்பட்டதாம்

இந்திரத் தேர் பிடித்து
இமயமலை கொண்டுசெல்வேன்
இமாலயப் பந்தலிலே
இதிகாசம் செதுக்கிடுவேன்

இன்னபிற தேவையென்ன
இப்போதே கிளம்பிவிடு
இனி ஏது பிரி பா(கு) பாடு
இது நீ அது நான் கவி பாடு

உச்சி மலை உயரத்திலே
உள்ளதென் உலகினிலே
உன்னருகில் நான் இருக்க
உயர்வடைவாய் என் உயிரே

எச்சி விழும் பள்ளத்தில்
என்ன குச்சி வீட்டில் குடித்தனம் இது
எத்தனை நாள் இத்தனம் வா
எட்டி உதை என் சொப்பணமே

மதி கெட்ட மடக் குருவி
மனமயங்கிப் பறந்திடவே
மழைகொட்டத் தொடங்கியதாம்
மரக் கோலம் கலைந்ததுவாம்

உயரப் பறக்க இனி
உலகம் திறந்த பின்னே
உதறித் தவிர்க்க மனம்
உவகை தரித்த பின்னே

கொடியெதற்கு கிளையதெற்கு
கொடுமை இனி குடை எதற்கு
கொண்ட வினை கழிந்தது இனி
கொள்ளை வழி பிறந்ததென்று

தொடுவானம் திறந்தெதென
தொலைதூரம் பறந்ததுவாம் சிறு குருவி..

பறந்து திரிந்த களை மறந்து
படர்ந்து விரிந்து மடம் திறந்து
பகிர்ந்து தனிந்து பயம் தெளிந்து
பறந்தே வந்ததுவாம் பருந்தோடு ...

எட்டாவுயரம் அடைந்துவிட்டொம்
எட்டும் வரை வாழ்வில் உயர்ந்துவிட்டோம்
எச்சப் பிழைப்பு அதைக் களைந்துவிட்டோம் - இனி
எதுவுமில்லை நாம் அடைந்துவிட்டோம்

சிட்டுக்குருவி என் பிறப்பு... இனி
சிறக்கப்போகுது என் சிறப்பு
சிறுகிப்போனது பார் உளத் தவிப்பு - இது
சிவப்பே இல்லாத சிறப்பு என்று

அசதி களைய அயர்ந்ததுவாம் சிறு குருவி
அன்றைய நாள் பருந்துக்குப் பசி வரும் வரை

உயரத்தான் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமோ
உலகெல்லாம் அழிந்த பின் உன்
உடல்மட்டும் உயர்ந்தாகுமோ - இல்லை என் போல்
உக்கித்தான் விருந்தாகுமோ ..

குலையடிக்கும் அம்பலமே
குருதிவிலை சொல்வாயோ
குருவிக் கதை அறிவாயோ...!?

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்

No comments:

Post a Comment