அடிமேல் அடி விழுந்த போதிலும்
வாழவே ஆசைப்படுகிறேன்...
வெட்ட வெட்ட துளிர் விடும்
மரங்களைப் போல...
சக மனிதர்களின் அனுபவங்களிலிருந்தும்
பாடங்களை கற்றுக் கொள்கிறேன்...
மலருக்கு மலர் சென்று
தேன் சேகரிக்கும் தேனீக்களைப் போல...
அவதூறுகளையும், புறக்கணிப்புகளையும்
பொறுத்து வாழவே விரும்புகிறேன்...
தன்னைத் தோண்டுபவரையும் விழாமல்
தாங்கும் பூமியைப் போல...
ஆர்ப்பரிக்கும் கடலலை என
எண்ணங்களை ஆரவாரம் செய்த போதிலும்....
மோன நிலை பழகுகிறேன்
ஆழ்கடல் அமைதி போல...
உணர்வுகள் காயப்படும் போதெல்லாம்
உடைந்து போனாலும்
உயிர்த்தெழவே விழைகிறேன்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவையைப் போல...
வாழ்க்கை எனும் பள்ளியிலே
மாணவனாகவே இருந்திட
ஆர்வம் கொள்கிறேன்...
அற்புத பாடங்களை அனுபவங்களாக
தந்து கொண்டிருக்கும்
இயற்கையோடு இயற்கையாக....
- எம். காந்திமதி கிருஷ்ணன், சென்னை